இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து, உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (World Cricketers’ Association – WCA) வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

சமரி அதபத்துவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், இத்தாலியின் வேன் மேட்சன், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் மற்றும் மேடி கிரீன் ஆகியோரும் இந்தப் புதிய குழுவில் இணைந்துள்ளனர்.

ஓய்வுபெற்ற நியூசிலாந்து வீரர்களான டிம் சவுதி மற்றும் சோஃபி டிவைன் ஆகியோருக்குப் பதிலாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் ஏற்கனவே பெட் கம்மின்ஸ் (அவுஸ்திரேலியா), ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்), ஹீதர் நைட் (இங்கிலாந்து) போன்ற முன்னணி சர்வதேச வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமரி அதபத்து,”இந்த உலகளாவிய அமைப்பில் ஒரு அங்கமாகத் தெரிவு செய்யப்பட்டதை இட்டு நான் பெருமையடைகிறேன்.

இது எனக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் ஒட்டுமொத்த ஆசிய கிரிக்கெட் சமூகத்திற்கும் கிடைத்த கௌரவமாகும். உலகளவில் வீரர்களின் குரலை வலுப்படுத்தவும், குறிப்பாக ஆசிய வீரர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் நான் பாடுபடுவேன்.” என தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை, வீரர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து முடிவெடுக்கும் போது, வீரர்களின் கூட்டுக்குரலை வலுவாக ஒலிக்கச் செய்வதே இந்த ஆலோசனைக் குழுவின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது போன்ற முக்கிய விடயங்களில் இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *